உலகம்
Typography

அண்மையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் திட்டத்தை இப்போது மேற்கொள்ளப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா பேட்டியளித்திருந்தார்.

ஆனாலும் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இரு நாடுகளும் சம்மதித்தால் மாத்திரம் தான் இப்பிரச்சினையில் தலையிடுவேன் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் உலக அரங்கில் தாம் தனித்து விடப் படுவதாக பாகிஸ்தான் மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. அதாவது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாது போய் விட்டது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை அண்மையில் இந்திய மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடனான ரயில் போக்குவரத்து, வர்த்தக மற்றும் தூதரக உறவைத் துண்டித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகளின் உதவியை நாடவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியா உலகின் மிகப் பெரிய சந்தையாக இருப்பதால் தமக்கு நெருக்கமாக இருக்கும் நாடுகள் உட்பட சர்வதேசம் தனது சொந்த ஆதாயத்தைக் கருதி பாகிஸ்தானுக்கு நிச்சயம் ஆதரவளிக்கப் போவதில்லை என வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி மேலும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்