உலகம்

ஹாங்காங்கில் பல நாட்களாகப் பல இலட்சக் கணக்கான பொது மக்களால் முன்னெடுக்கப் பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணியின் உச்சக் கட்டமாக சமீபத்தில் நேற்று முதல் அவர்கள் அதன் முக்கிய விமான நிலையத்தினை முற்றுகை இட்டு பொதிகளை சுமக்கும் வண்டிகள் மற்றும் சிறிய தடுப்பு கேட்களை உபயோகித்து பயணிகள் புறப்படு மையத்துக்குச் செல்ல முடியாதவாறு தடுத்துள்ளனர்.

இதனால் ஹாங்காங் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களது புறப்பாடும் ரத்து செய்யப் பட்டு பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் விமானச் சேவைகள் எப்போது வழமைக்குத் திரும்பும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மேலும் ஹாங்காங் போலிசாரைத் தாக்க ஆபத்தான கருவிகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் பயன்படுத்தி வருவதாக சீனா கடுமையாகச் சாடியுள்ளதுடன் இது அங்கு தீவிரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி என்றும் எச்சரித்துள்ளதாக ஹாங்காங் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் மோதல்களின் போது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், ஆர்ப்பாட்டக் காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் பிரயோகித்துள்ளனர். மேலும் இதன் போது 40 பேர் காயம் அடைந்ததாகவும் ஒரு மாதுவின் கண்ணில் தோட்டா பாய்ந்து அவர் கண் பார்வை இழக்கும் நிலை தோன்றியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.