உலகம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பியும், வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சி எம்பியுமான ஜோ ஜோன்சன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

குடும்ப விஸ்வாசம் மற்றும் தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையே தான் போராட வேண்டி ஏற்பட்டதாகவும் இதனால் தனது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2016 ஆமாண்டு நடத்தப் பட்ட பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் ஜோ ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்றும், போரிஸ் விலக வேண்டும் எனவும் வாக்களித்து பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். மேலும் முன்னால் பிரதமர் தெரேசா மே தயாரித்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே ஜோ ஒருமுறை தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஆனால் பின்னர் தனது சகோதரர் போரிஸ் ஜான்சனை கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக்கியதை அடுத்து ஜோ மீண்டும் அமைச்சர் ஆனார்.

இந்நிலையில் ஒப்பந்தம் இல்லாது பிரெக்ஸிட்டில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஆதரித்த கன்சர்வேட்டிவ் கட்சியின் 21 எம்பிக்கள் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட நிலையில் ஜோ பதவி விலகுவது நம்ப முடியாத விதத்தில் முக்கிய தருணத்தில் நிகழ்ந்துள்ளதாக பிபிசி அரசியல் ஆய்வாளர் லாரா குயன்ஸ்பெர்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சக எம்பிக்கள் பதவி நீக்கப் பட்டது குறித்து அதிருப்தி அடைந்த ஜோ இம்முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஊகிக்கப் படுகின்றது. பிரெக்ஸிட் சிக்கல் நிலவுவதால் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்த திட்டம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப் பட்டது. ஆனாலும் மறுதேர்தல் தீர்மானத்தின் மீது மீண்டும் திங்கட்கிழமை வாக்களிக்க எம்பிக்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.