உலகம்

சவுதி அரேபியாவில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் ஆளில்லா விமானமான டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டதை அடுத்து அங்கு எண்ணெய் மற்றும் எரிவாய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஈரானின் ஆதரவைக் கொண்டுள்ள யேமெனில் உள்ள ஹௌத்தி கிளர்ச்சியாளர்களே இந்த சிறிய டிரோன்களைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சவுதி அரசின் இம்முடிவால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்புப் பாதிக்கப் படும் என அந்நாட்டு ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த அளவானது சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் அரைப் பங்காகும். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இதுவரை இல்லாதளவு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரம்கோ நிறுவனத்தின் அப்குவாய்க் மற்றும் குராய்ஸ் ஆகிய எண்ணெய்க் கிணறுகள் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலில் யாரும் பலியாகவில்லை என்ற போதும் திகதி அறிவிக்கப் படாமல் இவ்விரு கிணறுகளும் மூடப் பட்டுள்ளன. இதனால் விரைவில் பஇந்தியாவில் எண்ணெய் விலை எதிர்பாராதளவுக்கு கிடு கிடுவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய அரசு கவலையில் உள்ளது.

தாக்குதல் நடத்தப் பட்ட பகுதியில் முழுமையாகப் பாதுகாப்பு உறுதி செய்யப் படும் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தி வைக்கப் படவுள்ளதால் இன்னும் ஒரு வாரத்துக்கு சவுதியில் இருந்து உலக நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி படிப்படியாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.