உலகம்

பாகிஸ்தான் மீது அண்மையில் அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப் பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப் படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பும் அமெரிக்காவின் தாக்குதலில் ஹம்சா கொல்லப் பட்டதாக பல யூகங்கள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை ஆப்கான் பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வான் வழித் தாக்குதலில் ஹம்சா கொல்லப் பட்டதை முதன் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப் படுத்தியுள்ளார். ஹம்சா பின்லேடன் கொல்லப் பட்டமையானது அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைமைத்துவம் மற்றும் தீவிரவாதக் குழுவின் செயற்பாட்டு நடவடிக்கைகளைக் குறைக்கும் விதத்தில் ஒரு முக்கிய இழப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடனின் 20 குழந்தைகளில் 15 ஆவது குழந்தையும், அவரது 3 ஆவது மனைவி ஹம்சாவின் மகனுமாவார் இந்த 30 வயதாகும் ஹம்சா பின்லேடன். கடந்த பெப்ரவரியில் ஹம்சாவின் தலைக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது. 2011 இல் அல்கொய்தா தலைவரும் செப்டம்பர் 11 தாக்குதல் சூத்திரதாரியுமான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் வைத்து அமெரிக்க நேவி சீல்ஸ் படைகளால் சுற்றி வளைக்கப் பட்டு கொல்லப் பட்டார்.

இதன் பின் அல்கொய்தா இயக்கத்தின் வலிமையான தலைவராக ஹம்சா பின்லேடன் வளர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் ரஷ்யப் பிரதிநிதிகளுடன் அண்மையில் தலிபான் போராளிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.