உலகம்

தாய்லாந்தின் காஞ்சனாபுரி மாகாணத்திலுள்ள புத்தர் கோயில் ஒன்றில் ஏராளமான புலிகள் வளர்க்கப் பட்டு வந்தன.

இப்புலிகள் மிருகங்களுக்கான தன்மைகளை இழந்து மனிதர்களுடன் விளையாடும் விதத்தில் கொடுமைப் படுத்தப் பட்டு வளர்க்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் புலிக் கோயில் என்று அழைக்கப் பட்டு வந்த அந்த பிரபல சுற்றுலாத் தலத்தில் 2016 ஆமாண்டு திடீர் ரெயிடு நடத்தப் பட்டது.

அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் இக்கோயிலில் சோதனையிட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து இறந்த நிலையில் இருந்த 40 புலிக் குட்டிகளை மீட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைத்துப் புலிகளையும் மீட்டு அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களில் விட்டனர். இவ்வாறு விடுவிக்கப் பட்ட போது 147 புலிகள் கைப்பற்றப் பட்டதாகவும் இதில் 85 புலிகள் உயிரிழந்த நிலையில் தற்போது 61 புலிகள் மாத்திரமே உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சீனாவிலும், வியட்நாமிலும் புலிகளின் உடல் பாகங்களுக்கு மவுசு இருப்பதால் தாய்லாந்தில் உள்ள இந்தப் புத்தர் கோயிலில் புலிகள் கொல்லப் பட்டு அங்கு அனுப்பப் படும் நிகழ்வும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான புலிகள் இறந்தமைக்கு அவை மிருகங்களுக்கான தன்மையில் வளர்க்கப் படாததும், அவற்றில் மரபியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டதும் என்பது கூறப்படுகின்றது.