உலகம்
Typography

சிரியாவின் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள வடக்கு சிரியாவில் இருந்து 5 நாட்களுக்குள் குர்துப் படை வெளியேற வேண்டும் என்ற காலக் கெடு விதித்துள்ள துருக்கி அதற்காகத் தற்காலிகமாகத் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.

இத்தகவலை உறுதிப் படுத்திய அமெரிக்க பிரதி அதிபர் மைக் பென்ஸ் மேலும் தெரிவிக்கையில், இவ்விடயத்தில் அமைதியான தீர்வை எட்டுவதன் மூலம் இந்த பாதுகாப்பு வலயத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்க அமெரிக்காவும் துருக்கியும் இணக்கப் பாட்டுக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பிரதி அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகள் துருக்கி தலைநகர் அங்காராவில் அந்நாட்டு அதிபர் ரெஸெப் தயிப் எர்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பின்பே இந்த இணக்கப்பாடு எட்டப் பட்டுள்ளது. இவர்களது பேச்சுவார்த்தையின் போது துருக்கி தனது தன்னிச்சையான யுத்தப் போக்கினை நிறுத்தா விட்டால் அதன் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை அதிகரிக்கப் படலாம் எனவும் பேசப் பட்டதாக தெரிய வருகின்றது.

தனி நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்து இனப் போராளிகளை பாதுகாப்பு வலையம் எனப்படும் வடசிரிய மற்றும் துருக்கி எல்லையில் இருந்து முற்றாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டே துருக்கி தனது இராணுவ நடவடிக்கையை அங்கு தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் நிபந்தனையின் படி குர்துக்கள் தங்களது படைகளை பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றி விட்டாலும் தனது யுத்த நிறுத்தத்தைத் தொடரும் பட்சத்திலும் இராணுவத்தை மீளப் பெறும் நோக்கம் இல்லை எனத் துருக்கி தெரிவித்துள்ளது.

மைக் பென்ஸின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 5 நாள் யுத்த நிறுத்தம் எட்டப் பட்டிருப்பது நல்ல செய்தி என்றும், மில்லியன் கணக்கான உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றும் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்