உலகம்

பாகிஸ்தானைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க சர்வதேசத் தீவிரவாதத் தடுப்பு அமைப்பான FATF எதிர்வரும் பெப்ரவரி 2020 வரை 4 மாதக் காலக்கெடு நிபந்தனை விதித்துள்ளது.

அதாவது பாகிஸ்தானில் இருந்து செயற்பட்டு வரும் தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்தவே அந்நாட்டு அரசுக்கு இந்தக் காலக்கெடு அளிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் 27 விதிமுறைகளை விதித்துள்ள FATF அமைப்பு தமக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் பாகிஸ்தான் செயற்படாவிட்டால் அதனை நிச்சயம் ஆபத்தான நாடுகளின் கருப்புப் பட்டியலில் சேர்ப்போம் என்று தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கான நிதியுதவியைத் தடுத்தல் மற்றும் சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனையை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த சர்வதேச தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு பாரிஸில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே இது தொடர்பில் 2018 ஆமாண்டு ஜூன் மாதம் 15 மாத அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இந்த அவகாசம் முடிந்துள்ள நிலையில் தான் தற்போது FATF அமைப்பின் மறு ஆய்வுக் கூட்டம் கடந்த இரு நாட்களாகப் பாரிஸில் இடம்பெற்றது.

இதில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இதன்போது மலேசியா, துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் சம்மதிக்காத காரணத்தினால் தான் பாகிஸ்தானை உடனடியாகத் தீவிரவாதிகளுக்கான கருப்புப் பட்டியலில் சேர்க்காது வெறும் எச்சரிக்கை மாத்திரம் விடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.