உலகம்

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக் கொள்வதாக திங்கட்கிழமை பாகிஸ்தான் திடீரென அறிவித்துள்ளது.

இது சர்வதேச தபால் சேவை மரபுகளுக்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் மாதம் மோடி தலைமையிலான இந்திய அரசு நீக்கம் செய்ததை அடுத்து இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் உடனே அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் பணிபுரிந்த தமது நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்ததுடன் பாகிஸ்தானில் செயற்பட்ட இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது பாகிஸ்தான் அரசு. மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே இயங்கி வந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. வாகா எல்லையையும் மூடிக் கொண்டது.

மேலும் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை ஒன்று கூடலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் இடையே அணுவாயுதப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற தொனியில் பேசினார். மேலும் எல்லையில் அதிகரித்த பதற்றம் காரணமாக சனிக்கிழமை இரவு முதல் ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் இரு இந்திய இராணுவ வீரர்கள் அடங்கலாக 3 பேர் பலியாகினர். இதற்குப் பீரங்கித் தாக்குதல் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்தப் பதிலடித் தாக்குதலில் கிட்டத்தட்ட 10 பாகிஸ்தான் துருப்புக்கள் பலியானதாகவும், இப்பகுதியில் செயற்பட்டு வந்த 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப் பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.