உலகம்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக அறிவிக்கப்ட்ட காலக்கெடுவான அக்டோபர் 31ந் திகதி அண்மித்து வருகிறது. ஆயினும் அந் நடவடிக்கை தொடர்பாக ஆரம்பம் முதலே இருந்து வரும் குழப்பங்களும் குறையவில்லை.

இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையெனத் தெரிவிக்கப்படும் இந் நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். முன்னதாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ நிறைவேறும் என அவர் அறிவித்திருந்தார்.

போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தமும், வழக்கம் போல் பாராளுமன்னற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடுவை வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்க கோரிய சட்டத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் 322 பேர் ஆதரவாகவும், 306 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு போரிஸ் ஜான்சன் கடிதம் அனுப்பியுள்ளார். இதேவேளை நேற்றைய தினம் ‘பிரெக்ஸிட்’ தொடர்பிலான திருத்தங்கள் மற்றும் விபரங்கள் உள்ளடங்கிய திரும்பப் பெறுதல் ஒப்பந்த மசோதா ஒன்றினை பிரதமர், உறுப்பினர்கள் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக விரைவில் உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ள நிலையில் அக்டோபர் 31ந் திகதி என்ன நிகழும் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.