உலகம்

உலகின் இரு மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுகமாக நடைபெற்று வரும் வர்த்த்கப் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், ஹாங்கொங்கில் சீன அரசுக்கு எதிராக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பொது மக்களது ஆர்ப்பாட்டத்தில் அவர்களது கோரிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவாக செயற்படுவதும் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக உருவெடுத்துள்ளது.

திங்கட்கிழமை அமெரிக்க யுத்தக் கப்பல் மற்றும் அதன் இராணுவ விமானங்கள் என்பன ஹாங்கொங்கை வந்தடைய சீனா தடை விதித்துள்ளது. மேலும் கடந்த வாரம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பாராளுமன்றத்தில், ஜனநாயகத்தை வலியுறுத்தும் ஹாங்கொங் மக்கள் போராட்டம் சார்பாக இரு மசோதாக்கள் அனுமதிக்கப் பட்டன. இதனால் விசனம் அடைந்துள்ள சீன அரசு தற்போது மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு (NGO) தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஜூன் முதற்கொண்டு ஹாங்கொங்கில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தின் உத்வேகத்தை அதிகரிப்பதாக வாஷிங்டன் மாத்திரமன்றி வேறு சில மேற்குலக நாடுகளையும் சீன அரசு குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறை பேச்சாளர் ஹுவா சுன்யிங் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும் போது, 'அமெரிக்கா ஹாங்கொங்கிலும், சீன உள் விவகாரங்களிலும் தலையிடுவதை உடனே நிறுத்த வேண்டும். ஹாங்கொங்கில் அமைதியையும், ஸ்திரத் தன்மையையும் மாத்திரமன்றி தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை, அபிவிருத்தி இலக்குகள் என்பவற்றையும் சீன அரசு தனியாகவே உறுதிப் படுத்தும்!' என்றுள்ளார்.