உலகம்

நியூயோர்க் ஐ.நா பாதுகாப்புச் சபையில் காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்துள்ளது.

காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் சீனாவின் ஆதரவுடன் முயன்ற போதும் இம்முறையும் அது தோல்வியைத் தழுவியதால் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமரிசித்துள்ளது. கடந்த வருடம் ஜம்மு காஷ்மீருக்கான சிறந்த அந்தஸ்தை இந்தியா நீக்கியதை அடுத்து உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப் படுத்தப் பட்டது.

அதனால் இவ்விவகாரத்தை ஏற்கனவே இரு தடவை ஐ.நாவில் கொண்டு வர பாகிஸ்தான் முயன்றும் அது கைகூடவில்லை. இம்முறையும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் மற்றைய நான்கு நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் எனக் கைவிரித்ததால் பாகிஸ்தானும் அதன் நட்பு நாடான சீனாவும் ஏமாற்றம் அடைந்துள்ளன.

மேலும் பாகிஸ்தானின் எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் ஐ.நா சபை ஏற்காததற்கு இந்தியா மகிழ்ச்சியடைகின்றது என இந்தியாவுக்கான ஐ.நா பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இனிமேலாவது இவ்வாறான முயற்சிகளைக் கைவிட்டு விட்டு இந்தியாவுடன் இயல்பான பேச்சுவார்த்தை வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் சையத் அக்பருதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.