உலகம்
Typography

ஜப்பான் பிரதமர் அபே மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்ரிகோ டுவெடெர்ட்டே ஆகிய இருவரும் வியென்தியானே இல் சந்தித்து இரு நாட்டு கூட்டுறவை வலுப்படுத்துவதற்கும் தென் சீனக் கடல் விவகாரத்தில் சமாதானமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே இவ்விரு நாடுகளும் சீனாவுடன் தென் சீனக் கடல் விவகாரத்தில் முறுகலில் உள்ள நிலையில் இச்சந்திப்பு  நிகழ்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின் போது ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே பிலிப்பைன்ஸுக்கு இரு பாரிய பெட்ரோல் கப்பல்களையும் 5 கண்காணிப்பு  விமானங்களையும் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடல் விவகாரத்தில் ஜப்பானும், பிலிப்பைன்ஸும் ஒன்று பட்டதை ஜப்பானின் பிரதி  தலைமை கேபினெட் செயலாளர் கொயிச்சி ஹகியுடா உறுதி படுத்தியுள்ளார். வருடாந்தம் $5 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறும் தென் சீனக் கடலின் மிகப் பெரும் பகுதியை சீனா கொண்டாடுகின்றது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் அதன் பகுதிகளைக் கொண்டாடுகின்றன.

ஜூலை மாதம் ஹாகுவே இலுள்ள நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸ் தொடுத்த வழக்கின் பின்னர் வழங்கப் பட்ட தீர்ப்பில் தென் சீனக்  கடலில் சீனாவின் உரிமை மறுக்கப் பட்டது. எனினும் இதனை ஏற்றுக் கொள்ள சீனா வெளிப்படையாக  மறுப்பு தெரிவித்திருந்தது. ஏற்கனவே கிழக்கு சீனக் கடலில் உள்ள சில சிறிய தீவுகளில் சீனாவும் ஜப்பானும் மாறி மாறி சொந்தம் கொண்டாடுவதால் இரு நாட்டு உறவிலும்  சிறு விரிசல் இருந்து வருகின்றது. இந்நிலையில் பிலிப்பைன்ஸுக்கு  10 சிறிய ரக பெட்ரோல் கப்பல்களை வழங்குவதற்கு  ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS