உலகம்
Typography

ஈராக்கின் வடக்கு நகரமான கய்யராஹ் இலிருந்து ஈராக்கிய படைகள் ஜிஹாதிஸ்ட்டுக்களை வெளியேற்றிய பின்னர் 2 வருடங்களுக்குப் பிறகு  முதன் முறையாக ஐ.நா இன் உணவு உதவி அங்குள்ள 30 000 குடிமக்களையும் சென்றடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ஐ.நா சபை அறிவித்துள்ளது.

மோசுல் நகருக்கு மிகவும் வடக்கே ஜிஹாதிஸ்ட்டுக்களின் கைவசம் இருந்த கய்யராஹ் இனை ஆகஸ்ட்  25 ஆம் திகதி ஈராக் அரச படைகள் முற்றுகையிட்டு அங்கிருந்த ISIS படையினரை வெளியேற்றியமை ஈராக் அரசுக்கு முக்கிய மூலோபாய நகர்வாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் கய்யராஹ் கடந்த இரு வருடங்களாக அடைய முடியாத ஒன்றாக இருந்தது என  ஐ.நா உலக உணவு திட்டமான WFP வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈராக்குக்கான WFP இன்  இயக்குனர் சால்லி ஹாய்டொக் கருத்துத் தெரிவிக்கையில் கய்யராஹ் மக்கள் பல காலமாக மிக மோசமான பட்டினியாலும் உரிய உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் இன்றியும் தவித்து வந்துள்ளனர் என்றுள்ளார்.

இந்நிலையில்  WFP இன் அறிக்கையில் கடந்த வாரம் கய்யராஹ் இற்கு வழங்கப் பட்ட உணவானது ஒரு மாதத்துக்குப் போதுமானது என்றும் இதில் பேரிச்சம் பழம், பீன்ஸ், பொதிகளில் அடைக்கப் பட்ட உணவு, அரிசி,பருப்பு,கோதுமை மா மற்றும் மரக்கறி எண்ணெய் என்பட அடங்குவதாகவும்  தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இறுதி  சண்டையின் போது கய்யராஹ் இன் சில எண்ணெய் வயல்களை ஜிஹாதிஸ்ட்டுக்கள் தீயிட்டதால் எழுந்த கரும் புகை அந்நகரைச் சூழ்ந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. கய்யராஹ் இன் அனைத்துக் கடைகளும் அழிக்கப் பட்டோ மூடப் பட்டோ இருப்பதால் அங்கு உணவு சேமிப்பு ஆபத்தான மட்டத்துக்கு குறைந்து விட்டதால் அண்மையில் அறுவடையான கோதுமை மாவில் மட்டும் பொதுமக்கள் தங்கி இருக்க வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.

இதை விட பாதுகாப்பான குடி நீர், மின்சாரம் மற்றும்  மருத்துவ சேவைகள் என்பன அங்கு நினைத்துப் பார்க்க முடியாதவையாக மாறியுள்ளன. டைகிரிஸ் நதிக்கு அண்மையில் உள்ள கய்யராஹ் நகரம்  அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல் உதவியுடன் ஈராக்கிய அரச படைகளால் 3  நாள்  ஆப்பரேஷனில் கைப்பற்றப்  பட்டது. இந்நகரமே  ஈராக்கின் மோசுல் பிராந்தியத்தில் ISIS இன் கடைசி அரணாக விளங்கியது.

கடந்த மாதம் ஐ.நா அகதிகள் ஏஜன்ஸியான UNHCR, மோசுல் முற்றுகை மேலதிக 1.2 மில்லியன் மக்களை இடம்பெயர வைக்கும் என எச்சரித்திருந்தது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஈராக்கில் குழப்ப  நிலை காரணமாக கிட்டத்தட்ட 3.4 மில்லியன் மக்கள் ஏற்கனவே  இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு வரை இடம்பெயர்ந்த குடும்பங்களைக் கையாள்வதற்காக WFP இற்கு அவசரமாக சுமார் $106 மில்லியன் டாலர் தேவைப்  படுவதாக அது  அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS