உலகம்
Typography

உலகம் முழுதும் யுத்த குழப்ப நிலை, வன்முறை, வறுமை மற்றும் வேறு காரணிகளால் குறைந்த பட்சம் 50 மில்லியன் சிறுவர்கள் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா சிறுவர்கள் ஏஜன்ஸியான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் இடம்பெயர்ந்துள்ள மக்களில் அரைப் பங்குக்கும்  அதிகமானவர்கள் சிறுவர்கள் என்றும் இதில் அரைப் பங்கு அளவு சிறுவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்  என்றும் யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கின்றது. 

மொத்த எண்ணிக்கையில் 28 மில்லியன் சிறுவர் அகதிகள் யுத்தம்  காரணமாகவும் மேலதிக 20 மில்லியன் சிறுவர் அகதிகள் சிறந்த வாழ்க்கை வசதிகளைத் தேடியும் இடம்பெயர்ந்திருப்பதாகவும்தெ ரிய வருகின்றது. இந்த அறிக்கையில் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களே உள்ளடக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அகதிகளாக இடம்பெயர்ந்து கடலில் மூழ்கி கரையில் கேட்பாரற்று ஒதுங்கிக் கிடந்த துருக்கி நாட்டின் அய்லான் குர்டி என்ற  சின்னஞ்சிறு சிசுவின் சடலம் மற்றும் தனது வீடு அழிக்கப் பட்ட பின் காயமுற்று சேறு படிந்த உடலுடன் அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவாறு இருந்த ஒம்ரான் டாக்னீஷ் ஆகியோரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி உலகை அதிர்ச்சி அடையச் செய்திருந்தன.

இந்த இரு புகைப்படங்களும் அது சிறுமியோ அல்லது சிறுவனோ யாராக இருந்தாலும் அது  இன்று  உலகில் ஆபத்தில் சிக்கியிருக்கும் பல மில்லியன்  சிறுவர்களின் நிலையைத் தான் பிரதிபலிக்கின்றது என UNICEF இன் பிரதான இயக்குனர் அந்தோனி லாகே விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அகதிகளாக இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான சிறுவர்களில் பலர்  உரிய ஆவணங்கள் இல்லாமை மற்றும்  உறுதியற்ற சட்ட நிலை மற்றும் அவர்களின் நன்னடைத்தை தொடர்பான திட்டமிடப் பட்ட கண்காணிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ளனர். இவ்வருடம் சுயமாக எல்லைகளைக் கடந்த  சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் 100 000 இற்கும் அதிகமான மைனர் சிறுவர்கள் 78 நாடுகளில் அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இது 2014 ஐ விட 3 மடங்கு அதிகமாகும். உலக மக்கள் தொகையில் 1/3 பங்கு வகிக்கும் சிறுவர்களோ உலக அகதிகள் தொகையில் 1/2 பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு 45% வீத சிறுவர் அகதிகள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்