உலகம்
Typography

உலகுக்கு அச்சுறுத்தலாக உள்ள சில முக்கிய தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்டை நாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் தீவிரவாதிகளைத் தாக்குதல் இலக்காக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடுமையாக வலியுறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் இயங்கி வரும் சர்வதேச நாடுகளால் தடை செய்யப் பட்ட தலிபான், அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா மற்றும்  ஹக்கானி வலையமைப்பு போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் போரிடுவதற்காக அமெரிக்காவிடம் நிதி உதவி பெற்றுக் கொண்டு உரிய விதத்தில்  செயற்படுவதில்லை என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. மேலும் மும்பைத் தாக்குதலில் முக்கிய புள்ளியான லஷ்கர் இ தொய்பா இன் ஜமாத் உத்  தாவா என்ற பிரிவின் தலைவன் ஹபீஸ் முகமது சயித் இன் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் விலை ஏற்கனவே விதித்துள்ளது. இந்நபர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக அமெரிக்கா கூறுகின்றது.

காஷ்மீர் வழியாக சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து சிபிஇசி என்ற பொருளாதார பாதை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்த்து இருப்பதாக ஹபீஸ் சயீத் முன்வைத்த குற்றச்சாட்டை  அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதை விட ஆப்கானிஸ்தானில்  இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மிக ஆபத்தான ஹக்கானி வலையமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்