உலகம்
Typography

அண்மையில் ஊடகப் பிரச்சாரம்  ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி கிளிங்டன் தான் அதிபராகத் தேர்வானால் முன்பு எப்படி அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் வேட்டையாடப் பட்டாரோ அதே விதத்தில் இன்று உலகுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ISIS இயக்கத் தலைவன் அபூ பக்கர் அல் பக்தாதியும் தோற்கடிக்கப் பட்டு கொல்லப் படுவார் என்று தெரிவித்துள்ளார். 

ஹிலாரி கிளிங்டன் மேலும் தெரிவிக்கையில், 'நாம் ISIS தீவிரவாத இயக்கத்தைத் தோற்கடிக்க வேண்டும்.  இதுதான் எனது அதிகபட்ச தீவிரவாதத்துக்கு எதிரான இலக்கு ஆகும். இதனை நாம்  வான் வழி தாக்குதல் உத்தியால் தான் செய்ய முடியும். அதாவது நாம் ISIS உடன் போராடி வரும் அரபுக்கள் மற்றும் குர்துக்களுக்கு தரை வழியான முற்றுகைக்கு இன்னமும் அதிக வான் வழி தாக்குதல் உதவியை வழங்க வேண்டும்.  ஈராக் இராணுவத்துக்கான எமது உதவி இன்னமும் உத்வேகத்துடன் இருக்க வேண்டும்.' என்றார்.  இத்தகவலை புதன்கிழமை நியூயோர்க் நகரில் ஹிலாரி தெரிவித்தார்.

இதேவேளை முக்கிய சிரிய நகரங்களில் இன்னமும் சில மாதங்களுக்குள் ISIS இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப் படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டெர் தெரிவித்துள்ளார். முக்கியமாக சிரியாவின் ரக்கா இல் இருந்தும் ஈராக்கின் மோசுலில் இருந்தும் ISIS முற்றாக வெளியேற்றப் படும் என அவர் உறுதியளித்துள்ளார். இது சாத்தியமானால் கடந்த 5 வருடங்களாக 2011 ஆம் ஆண்டு முதற்கொண்டு இடம்பெற்று வரும் சிரிய யுத்தத்தில் இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரியாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள ஜெனீவாவில் அமெரிக்கா மாநில செயலாளரான ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்யாவின் மாநில செயலாளரான செர்கெய் லவ்ரோவ் ஆகிய இருவரும் விரைவில் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்