உலகம்
Typography

வியெண்டியானேவில் இடம்பெற்று வரும் ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா மாநாடுகளில் கலந்து கொண்ட பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மியன்மார் ஜனநாயக ஐகோன் மற்றும் மாநில கவுன்சிலரான ஆங் சான் சூயி ஆகிய இருவருக்கும் இடையே  வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை இருதரப்பு பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்தும் புகைப்படங்களுடன் செய்தியை, இந்திய வெளியுறவு விவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இவர்களது சந்திப்பு தொடர்பான தகவல்களின் படி, மியான்மாரில் சமாதானம் மற்றும் மறுவாழ்வு செயற்திட்டம் தொடர்பில் மோடிக்கு சுருக்கமாக ஆங் சான் சூ குய் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மியான்மாரின் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் இருந்து போராளிக் குழுக்கள் சில தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் மியான்மாருடனான பாதுகாப்புக் கூட்டுறவே முக்கியமாக இந்த இருதரப்பு சந்திப்பில் மேற்கொள்ளப் பட்டது.

கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு போராளிக் குழுவுக்கும் மியான்மாரில் ஆதரவளிப்பதில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிபர் ஊ ஹ்தின் கியாவ் இனைத் தொடர்பு கொண்ட போது அவர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு கூட்டுறவு மட்டுமன்றி பால் பண்ணை, விலங்குகள் வேளாண்மை, பயிர்ச்செய்கை போன்ற விடயங்களிலும் பௌத்த தேசமான மியான்மாருடன் இந்தியா கூட்டுறவை மேற்கொள்ளவுள்ளது.

இறுதியில் தன்னுடனான சந்திப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஆங் சான் சூயி தான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவும் மிகுந்த ஆவலாக இருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்