உலகம்
Typography

சீனாவில் தற்போது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2236 ஆகவும், பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 75 465 ஆகவும் உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டு 50 நாட்களாகியும் இன்னமும் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில் சீனாவுக்கு வெளியே 26 இற்கும் அதிகமான நாடுகளில் இது பரவியுள்ளது.

சீனாவுக்கு வெளியே ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் தான் அதிகளவு கோவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளது. இக்கப்பலில் இந்த வைரஸ் தொற்றுக்கு 2 ஜப்பானியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 3500 பேர் கொண்ட இக்கப்பலில் தற்போது 8 இந்தியர்கள் அடங்கலாக கோவிட்-19 தொற்றுக்கு 634 பேர் உள்ளாகியுள்ளனர். ஆயினும் தற்போது ஜப்பான் அரசு வைரஸ் தொற்று இல்லாதவர்களைப் படிப்படியாக வெளியேற்ற இணங்கியுள்ளது. புதன்கிழமை 443 பேரும் வியாழக்கிழமை 500 பேரும் வெளியேறியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமைக்குள் வைரஸ் தொற்றில்லாத அனைவரும் கப்பலில் இருந்து வெளியேற்றப் படலாம் என ஜப்பான் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக்கப்பலை அடுத்து அதிகபட்சமாக தென்கொரியாவில் 156 பேருக்கு இதன் பாதிப்பு அறியப் பட்டும் இருவர் பலியாகியும் உள்ளனர். அண்மையில் ஈரானில் கோவிட்-19 தொற்றுக்கு இருவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவில் 2019 பேர் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS