உலகம்
Typography

சமீபத்தில் யேமெனில் இருந்து தனது நகரங்களைக் குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதல் சவுதி நேரப்படி வெள்ளி அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. அநேகமாக ஈரானின் ஆதரவுடன் யேமெனில் சவுதி கூட்டணிப் படைகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வரும் ஹௌத்தி கிளர்ச்சிப் போராளிகள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சவுதி ஐயம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஏவுகணைகள் யேமென் தலைநகர் சனாவில் இருந்து ஹௌத்திக்களால் ஏவப் பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது. இந்த ஏவுகணைகளை சவுதி அரேபியாவின் நவீன வான்வெளிப் பாதுகாப்புப் பொறிமுறை நடுவானில் இடைமறித்து அழித்துள்ளன. சவுதியின் நகரங்கள் மட்டுமன்றி அந்நாட்டுக் குடிமக்களையும் குறி வைத்து ஹௌத்திக்கள் ஏவிய இந்த ஏவுகணைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறிய அப்பட்டமான செயல் என சவுதி இராணுவ அதிகாரியான கேர்னல் துர்கி அல் மாலிகி விமரிசித்துள்ளார்.

இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு இன்னமும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS