உலகம்
Typography

பாகிஸ்தானை தொடர்ந்து கிரே லிஸ்ட்டில் வைத்திருக்க FATF எனப்படும் உலகளாவிய தீவிரவாத நிதித் தடுப்புக் கண்காணிப்பு அமைப்பு தீர்மானித்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

முக்கியமாக சர்வதேசத்தால் தடை செய்யப் பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி தொடர்ந்து செல்வதைப் பாகிஸ்தான் அரசு தடுக்கத் தவறும் பட்சத்தில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும் FATF அமைப்பு எச்சரித்துள்ளது.

FATF இன் இந்தத் தீர்மானம் சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற அதன் முழுமையான கூட்டத்தின் போது எடுக்கப் பட்டதாக பிடிஐ என்ற பாகிஸ்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் இந்தப் போக்கு காரணமாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து நிதியுதவி பெறுவது அதற்குக் கடினமாகி உள்ளது. இதனால் பாகிஸ்தானின் நிதிநிலை இன்னும் மோசமடையும் வாய்ப்பும் உண்டாகியுள்ளது.

முன்னதாக 2020 ஆமாண்டு ஜூன் மாதத்துக்குள் தனக்கு விதிக்கப் பட்ட 27 இலக்குகளையும் நிறைவு செய்து தீவிரவாதிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக் கேட்டுக் கொள்ளப் பட்டது. இதில் 13 ஐப் பூர்த்தி செய்ய பாகிஸ்தான் இணங்கவில்லை. இந்நிலையில் FATF அமைப்பு பாகிஸ்தானை இன்னமும் கருப்புப் பட்டியலில் இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS