உலகம்
Typography

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவுக்கு வெளியே தென்கொரியாவில் அதிக நபர்களைப் பாதித்துள்ளது.

சனிக்கிழமை மாத்திரம் புதிதாக 229 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில் தற்போது தென்கொரியாவில் மொத்தம் 433 பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தென்கொரிய நிலமை குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜங் சே க்யூன் கவலை தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக டெகூ என்ற ஊரில் உள்ள முதியவர்களுக்கான மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான மருத்துவ மனையில் தான் கோவிட்-19 வைரஸ் அதிகம் பரவியுள்ளது. டெகூ மருத்துவமனையில் 102 நோயாளிகளுக்கும், 9 பணியாளர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று இனம் காணப் பட்டுள்ளது. தற்போது டெகூவில் உள்ள தேவாலய உறுப்பினர்கள் 9336 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இதேவேளை சீனாவில் உள்ள சிறைகளில் மர்மமான முறையில் இந்த கோவிட்-19 வைரஸ் பரவி வருவது அங்கிருக்கும் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்போது 28 இற்கும் மேலான நாடுகளில் கோவிட்-19 வைரஸ் பரவி இருப்பது அறியப் பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே ஜப்பான் துறைமுகத்தில் தரித்து வைக்கப் பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலிலும், தென்கொரியாவிலும், சிங்கப்பூரிலும், தாய்லாந்திலும் மற்றும் இத்தாலியிலும் கோவிட்-19 வைரஸ் பரவுகை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த 3711 பேரில் இந்தியாவைச் சேர்ந்த 132 ஊழியர்களும், 6 பயணிகளும் அடங்குகின்றனர். தற்போது இக்கப்பலில் 600 இற்கும் அதிகமானவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதால் இவர்கள் இறக்கப் பட்டு விசேட வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 12 இந்தியர்களும் அடக்கம். தற்போது கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.

கோவிட்19 வைரஸுக்கு சீனாவின் ஹுபே மாகாணத்தில் மட்டும் 2442 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 76 936 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS