உலகம்
Typography

ரஷ்யாவின் சைபீரிய சமவெளியின் வடகிழக்கே உள்ள பெலாயா கோரா என்ற கிராமத்தில் இறந்து போன ஒரு பறவையின் உடலை உள்ளூர் வேட்டைக்காரர்கள் கண்டு பிடித்தனர்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்து போய் பனியில் அப்படியே புதைந்து போன பறவை தான் இது என அடையாளம் கண்டு பிடித்த அவர்கள் உடனே அந்தப் பறவை எச்சத்தை சுவீடன் நாட்டு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர்.

இந்தப் பறவை எச்சத்தை குறித்த அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் மற்றும் லவ் டாலன் ஆகியவர்கள் பரிசோதித்தனர். கதிரியக்க கரிம காலக் கணிப்பு முறை மூலம் இந்தப் பறவை ஆய்வு செய்யப் பட்ட போது இது சுமார் 46 000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடைசிப் பனியுகத்தில் வாழ்ந்து இறந்த பறவை என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பில் CNN தொலைக்காட்சி ஊடகத்துக்கு அளிக்கப் பட்ட பேட்டியில் குறித்த பறவை எச்சம், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வானம்பாடிப் பறவையின் இரு கிளை இனங்களின் மூதாதையராக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பறவை எச்சம் பனியுக விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் படிப்பதற்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பருவநிலை மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவக் கூடும் என்பதால் இக்கண்டுபிடிப்பு விலை மதிப்பற்றது எனப்படுகின்றது. சமீபத்தில் இப்பறவை எச்சம் கண்டுபிடிக்கப் பட்ட அதே இடத்துக்கு அருகே 18 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த நாய்க்குட்டியின் உடல் கண்டெடுக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS