உலகம்
Typography

வெள்ளிக்கிழமை காலை வடகொரியா தனது 5 ஆவதும் பிராந்திய அடிப்படையில் மிக சக்தி வாய்ந்ததுமான அணுவாயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் வடகொரியா செய்திருந்த அணுவாயுதப் பரிசோதனை விட சக்தியில் இருமடங்கு அதிகமாக இன்றைய பரிசோதனை அமைந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகள் மூலம் கொண்டு செல்லப் படக்கூடிய இந்த அணுவாயுதம் சர்வதேசத்துக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. இதனால் இச்சோதனை வெற்றி என வடகொரியா அறிவித்த அடுத்த கணமே அமெரிக்க அதிபர் ஒபாமா பதிலடியாக, அமெரிக்கா எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் வடகொரியாவை ஒரு அணுவாயுத வல்லரசாக ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார். காலை 9 மணிக்கு வடகொரியாவில் பரிசோதிக்கப் பட்ட இந்த அணுவாயுதத்தின் வெடிப்பாற்றல் 10 கிலோ டன்கள் ஆகும். இதனை தென்கொரியாவின் வானிலை அவதான நிலையத்தைச் சேர்ந்த கிம் நாம் வூக் உறுதி செய்துள்ளார்.

2 ஆம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் சக்தி 15 கிலோ டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா இன் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா இப்படியே ஆத்திரமூட்டும் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்தால் அது நிச்சயம் ஓர் போருக்கு இட்டுச் செல்லும் என அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.  அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த அணுப்பரிசோதனையை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் இது ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைத் தெளிவாக மீறிய செயல் என்றும் சாடியுள்ளன. மேலும் இவ்விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டும் இருந்தது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்