உலகம்

2024 இல் தனது பதவிக் காலம் முடிந்த பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் 12 வருடங்களுக்கு ரஷ்ய அதிபராகச் செயற்படும் விதத்திலான மசோதா ஒன்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற மூன்றாவதும், இறுதியுமான அமர்வின் போது நிறைவேற்றப் பட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட மூலம் கிரெம்லினின் பாராளுமன்ற கீழ் சபையில் 383-0 என்ற வாக்கு வித்தியாசத்திலும் 43 நடுநிலை வாக்குகளாலும் நிறைவேற்றப் பட்டது.

ஆனால் இது ஏப்பிரல் 22 ஆம் திகதி மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ரஷ்யாவின் கிரெம்லின் புரட்சியாளர்கள் இது ஒரு இழிவன அதிகாரத் துஷ்பிரயோகம் என்று விமரிசித்து இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 4 முறை அதிபராகப் பதவி வகித்த 67 வயதாகும் புடின் ரஷ்யாவை 20 ஆண்டுகளாக அதிபராக ஆட்சி செய்துள்ளார்.

ஆனாலும் 2008 ஆமாண்டு பிரதமராக புடின் பதவி இறங்க நேரிட்டதுடன், அவரது நெருங்கிய நண்பர் டிமிட்ரி மெத்வதேவ் 4 ஆண்டுகளுக்கு அதிபரானார். அவரின் ஆட்சிக் காலம் முடிந்ததும் மீண்டும் 2012 இல் மீண்டும் புடின் அதிபரானார். 2018 இல் இன்னும் 6 வருடங்களுக்கு ரஷ்ய அதிபராக புடின் மறுபடியும் பதவியேற்றார். தற்போது புடினின் மேலதிக 12 வருட பதவிக் காலம் தொடர்பான சட்டம் பொது மக்கள் வாக்கெடுப்புக்குப் பின் ரஷ்யாவின் சட்ட அமுலாக்க நீதிமன்றத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதன் பின்பு தான் அதிபர் புடினின் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பில் முடிவெடுக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.