உலகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவப் பாதுகாப்பினை வழங்குவதற்கான சீன மருத்துவர் குழுவும், உபகரணங்களும், இத்தாலியை வந்தடைந்தன. இதனை இத்தாலிக்கான சீனத் தூதுவராலயம் உறுதி செய்துள்ளது.

இத்தாலித் தலைநகர் ரோமிலுள்ள ஃபியாமிசினோ விமான நிலையத்தினை வந்தடைந்த இக்குழுவினரை, இத்தாலிக்கான சீனத் தூதவர் லி ஜுன்ஹுவா மற்றும் இத்தாலிய பிரதிநிதிகள், சீனா கிழக்கு A350 ஐ விமானசேவை அதிகாரிகள் குழுவுடன் வரவேற்றனர்.

மருத்துவ நிபுணர் குழு மற்றும் 30 டன் மருத்துவ பொருட்களுடன், இத்தாலியின் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைளுக்கு உதவுவதற்காக ஷாங்காயிலிருந்து நேற்றுப் புறப்பட்டிருந்தது. 10,000 கிலோமீட்டர் தொலைவினைக் கடந்து உற்சாகத்துடன் வந்துள்ள இந்த மருத்துவக்குழுவினர் சில மணிநேர ஓய்வுக்குப்பின் தங்கள் சேவையினை இத்தாலியில் வழங்குவார்கள் என இத்தாலிக்கான சீனத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்திருப்பதாக உலக சுகாதார மையம் நேற்று அறிவித்திருந்தது. சீனாவில் வைரஸ் தொற்றின் போது சிறப்பாகப் பணியாற்றிய அனுபவமிக்க இக்குழு, இத்தாலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையைச் சமாளிப்பதற்கு உதவியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.