உலகம்

"இத்தாலிக்காக கைகளைத் தட்டுவோம் ". "சேவையாளர்களுக்காக கரவொலி செய்வோம்" எனும் கோஷங்களுடன், இன்று மார்ச் 14 நன்பகல் 12 மணிக்கும், மாலை18.00 மணிக்கும் இத்தாலியில் நாடு தழுவிய flash mob நிகழ்வுக்கு தன்னார்வ இளைஞர்கள் சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், மேற் குறிப்பட்ட நேரங்களில் , தங்கள் வீடுகளின் பால்கணிகளில், சாளரங்களில் தோன்றி ஒன்றாக கரவொலி எழுப்பும் நிகழ்வாக இதனை ஒருங்கமைக்கின்றார்கள். வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவத்துறை சார்ந்த வைத்தியர்கள், தாதிகள், அதிகாரிகள், காலநேரம் பாராது கடமையாற்றும் அனைத்து சிவில் நிர்வாக ஊழியர்களையும் மரியாதை செய்வதற்காகவும், வீடுகளில் முடங்கிப் போன மக்கள் சாளரங்களின் வழியே மற்றையவர்களின் முகங்களை காணவும், உற்சாகம் பெறவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்ற நோக்கில் ஒருங்கமைக்கப்படும் இந் நிகழ்வுக்கு 'Applaudiamo l'Italia' எனப் பெயரிட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம், ரோமின் சில பகுதிகளிலும், நாப்போலியின் சில பகுதிகளிலும் மாலை 18.00 மணிக்கு இந்த நிகழ்வு பரீட்சார்த்த முயற்சியாக மேற் கொள்ளப்பட்ட போது பலரும் ஆர்வமுடன் பங்கேற்றிருக்கின்றார்கள். அப்போது இத்தாலியின் தேசிய கீதத்தை ஒலித்தார்கள். சாளரங்களில் " எல்லாம் நன்மையாகவே நடக்கும் " எனும் ( Tutto andra bene ! ) வாசகங்கள் எழுதிய பதாகைகளைத் தொங்கவிட்டிருந்தார்கள். இன்றைய நிகழ்வின் போது இத்தாலியின் தேசிய காற்பந்தாட்ட அணியின் அந்தெம் பாடலானா "Azzurro" பாடலைத் தெரிவு செய்துள்ளதாகவும் அறிய வருகிறது.

இது இவ்வாறிருக்க இத்தாலிக்கு அன்மையிலுள்ள சுவிற்சர்லாந்தின் தென் மாநிலமும், இத்தாலி மொழி பேசும் மாநிலமுமாகிய திச்சினோ மாநிலத்திலும் 14 ந்திகதி மதியம் 12 மணிக்கு, மருத்துவர்கள், தாதிகள், அதிகாரிகள் ஊழியர்களுக்கு நன்றி சொல்லவும், மரியாதை செய்யவும் ஜன்னல்கள், பலகணிகளில் நின்று கரவொலி எழுப்பும், இவ்வாறான நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.