உலகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் கடுமையினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய மக்கள் மனதில் இப்போது எழக் கூடிய ஆற்றாமை எல்லாம் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மீதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதானதுமாக வெளிப்பட்டு வருகிறது.

தங்களுக்கு நேர்ந்திருக்கும் பெருந்துயரின் போது, ஐரோப்பிய நாடுகள் தம்மை கைவிட்டுவிட்டதாக பெரும்பாலான இத்தாலியர்கள் உணருகின்றார்கள். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கோபமாக உரையாடி வருகின்றார்கள்.

இதற்கான முக்கியமான காரணமாக அவர்கள் கருதுவது, தங்களுக்கான மருத்துவப் பொருட்களுக்கான வழங்கல்களைத் தடைசெய்தமையே. குறிப்பாக முக அங்கிகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்களையே தந்துதவவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்ட ஒரு மாதகாலத்துக்குள், இத்தாலியில் வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 683 உயிரிழப்புக்களுடன் சேர்த்து 7503 என இத்தாலியின் சிவில் பாதுகாப்புத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,210 வைரஸ் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியில் வைரஸ் தொற்று அறியப்பட்டதிலிருந்து இப்போது வரையிலான மொத்த தொற்றாளர்கள் 74,000 ஆகியுள்ளது. இதில் சுமார் 9000 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.

இறந்து போன 7503 பேர்களில் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் 33 பேரும் அடக்கம். அதேபோல் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 74000 பேரில் சுமார் 5,000 பேர் இத்தாலிய சுகாதார துறை ஊழியர்கள் என இத்தாலியின் உயர் சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலோனோருக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் இல்லாமலே சேவையாற்றி இருக்கின்றார்கள். இதனாலேயே அவர்களில் பெரும்பாலோனோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இந்த விடயங்கள் வெளித் தெரிய வந்தபோதில் தங்கள் கையறுநிலை குறித்துக் கவலை கொண்ட இத்தாலியர்கள், மருத்துவ உபகரணங்களை உதவ மறுத்த ஐரோப்பிய நாடுகள் மீது ஆத்திரம் கொண்டிருக்கின்றார்கள். மருத்துவத்துறைசார்ந்தவர்களிடம் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் அது சற்று வேறுபட்டது. இத்தாலி தன்னிடமிருந்த மருத்துவ உபகரணங்கள், பொருட்கள் என்பவற்றை, இத்தாலி மற்றவர்களுக்கு தாராளமாகக் கொடுத்திருந்தது. ஆனால் தமக்குத் தேவையான போது கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றமாக அது இருக்கிறது.

இவையெல்லாம் சேர்ந்துதான் இப்போது சக ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் மீது கோபங்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள் இத்தாலிய மக்கள். இத்தாலியப் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ ஐரோப்பிய நாடுகளை விமர்சிப்பது போன்ற கருத்துக்கள் எதையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோரோனா அலை ஓய்தபின் எழப்போகும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் இப்போது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி மனநிலையை சமன் செய்யுமா? அல்லது சதி செய்யுமா ? என்பதைப்  பொறுத்து அமையப்போவது  இத்தாலியின் எதிர்கால அரசியல் மட்டுமல்ல என்பது மட்டும் இப்போதைக்கு புரிகிறது.