சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.
"அனைத்தும் சரியாக நடந்தால், ஜனவரி மாத இறுதிக்குள் தடுப்பூசிகளின் முதல் தொகுதி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம். அவை கிடைத்தவுடன்
தடுப்பூசி போட ஆரம்பிக்கலாம் என்று அர்த்தம்" எனக் குறிப்பிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, சுவிஸ்மெடிக் என்ற மருந்து ஒப்புதல் ஆணையம், நீண்ட மற்றும் கடுமையான சோதனை செயல்முறை காரணமாக, முதல் தடுப்பூசிகள்
அடுத்த ஆண்டின் வசந்த காலத்திற்கு முதல் சுவிற்சர்லாந்தில் கிடைக்கும் சாத்தியம் எதிர்பார்க்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்த நிலையிலும், சுவிஸில்
வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படும் நிலையிலும், அமைச்சரின் இந்த அறிவிப்பு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் அலைன் பெர்செட் மேலும் விளக்கம் தருகையில், "தடுப்பூசி முன்னதாகவே கிடைக்கும் என்பது, சுவிஸ்மெடிக் ஒப்புதல் செயல்முறையை மீறி விரைந்து செல்லும் என்று அர்த்தமல்ல. இந்த தடுப்பூசிகள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்படும். மாறாக அவசர ஒப்புதல் நடைமுறை எதுவும் திட்டமிடப்படவில்லை" எனவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு தடுப்பூசிகள் போடுவது தொடர்பிலான கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், " முதல் சுற்று நோய்த்தடுப்பு மருந்துகள் குறைந்த அளவுகளாக இருக்கும். முதியவர்கள் மற்றும் கடுமையான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தடுப்பூசி போடுவார்கள், அதே நேரத்தில் பொது மக்களுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். தடுப்பூசியை விரும்பும் எவருக்கும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.
சுவிற்சர்லாந்தில் உள்ள அனைவருக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டுமா ? என்ற கேள்விக்கு, "தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது, இதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆனால், பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுவரும் நபர்கள் தடுப்பூசி போட வேண்டியிருக்கும். குறிப்பாக சுகாதாரத் துறை மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாகலாம் என்றும், தடுப்பூசி திட்டத்தைத் தொடங்குவது தொடர்பில் தளவாட ரீதியாக மிகவும் சிக்கலானது " என்றும் கூறினார் பெர்செட் .
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்