ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.
கிறிஸ்மஸுக்கு முன்னதாக கொரோனா கவலையற்ற குடும்ப கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அநேகமாக இந்தவார இறுதியில் இது தொடர்பான புதிய விதிகளை அறிவிக்கவுள்ளன.
சுவிற்சர்லாந்தில் நத்தாருக்கு முன்னதாக ஒரு "மினி-தனிமைப்படுத்தலை" அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைகளை மாநில அரசுகளிடம் மத்திய கூட்டாட்சி அரசு கோரியுள்ளதாகவும், இன்று புதன்கிழமைக்குள் மாநில அரசுகள் சமர்ப்பிக்கும் கருத்துக்களின் வழி, புதிய நடைமுறைகளை வரும் வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவிக்கலாம் எனவும் தெரி வருகிறது.
மினி தனிமைப்படுத்தலில், வீடுகளில், விருந்துபசாரங்களில், அதிகபட்சம் பத்து நபர்கள் மற்றும் இரு குடும்பத்தவர்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படலாம். இந்த நடவடிக்கைகள் தனியார் துறைகளுக்கும் பொருந்தக் கூடும்.
உணவகங்களின் விருந்துபசாரங்களில் நான்கு பேர் மட்டுமே ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்படுவார்கள். இதன்போதும் நான்கு பேரும் அதிகபட்சம் இரண்டு வீடுகளைச் சார்ந்தவர்களாக இருக்க வலியுறுத்தப்படலாம். மற்றும் டேஜஸ் அன்ஸீகரால் பெறப்பட்ட ஒரு ஆவணத்தின்படி, டிசம்பர் 23 வரை பல நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதிக கவலையற்ற நத்தார் குடும்பக் கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு தினத்தன்று நடவடிக்கைகளை தளர்த்துவதை உறுதி செய்வதே இந்த இறுக்கத்தின் குறிக்கோள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அறிவிக்கப்டும் புதிய நடைமுறைகளின்படி, புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 1 மணி வரை பார்கள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படலாம். இது தற்போது இரவு 11 மணி ஊரடங்கு உத்தரவின் மூலம் பூட்டப்படுகின்றன.
இந்த நடைமுறைகளின் மற்றுமொரு முக்கியமான நோக்கம், பாதுகாப்பான குளிர்கால விளையாட்டு பருவத்தை உறுதி செய்வதுமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கோடைகால விடுமுறையில் பெரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருந்த சுற்றுலாத்துறையை குளிர்காலத்தில் ஒரளவுக்கேனும் பாதுகாக்கவேண்டும் என விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க ; இத்தாலியில் நத்தார் கொண்டாட்டங்கள் தொடர்பான புதிய விதிகள் டிசம்பர் 4ந்திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தெரிய வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் மக்கள் தமது சொந்த நகராட்சியை விட்டு வெளியேற தடை விதிக்கப்படும். ஆனால் மதிய உணவிற்கு உள்ளூரில்
ஒரு உணவகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
உறவினர்களுடன் மீண்டும் ஒன்றிணைவது அல்லது பிராந்தியத்திற்கு வெளியே இரண்டாவது வீடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை வரலாம். அதேபோல் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை. பயணங்களுக்கும் அனுமதி இல்லை. புத்தாண்டு தினத்தன்று மாலை 6 மணிக்கு ஹோட்டல் உணவகங்கள்
மூடப்படுவதற்கு உத்தரவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 4 முதல் அமலில் இருக்கும் புதிய கோவிட் விதிகளை அறிவிப்பதற்காக இத்தாலிய அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் இதற்கான முன்மொழிவைச் செய்ய உள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்