சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் கறை படிந்த நிகழ்வாக வாஷிங்டன் நாடாளுமன்ற முற்றுகையும், அதில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் பலியானதும் பதிவாகியிருந்தது.
இந்த முற்றுகை அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப் பட்டது என்ற கடுமையான குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப் பட்டது.
இன்னும் சில நாட்களில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடென் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், மேற்கொண்டு அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க திங்கட்கிழமை ஜனநாயகக் கட்சியினர் அவரை உடனே பதவி நீக்கவும், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றவும் நாடாளுமன்றத்தில் வலுவான கோரிக்கையை முன் வைத்தனர். அமெரிக்க அரசமைப்பு சட்டத்தின் 25 ஆம் திருத்தம் இதற்கு வழி செய்த போதும் குடியரசுக் கட்சியனரின் ஒன்றிணைந்த எதிர்ப்பால் இதனை நடைமுறைப் படுத்த முடியவில்லை.
இந்நிலையில் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடெனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்பதைத் தடுக்கும் விதத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதம் ஏந்திய வன்முறைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பதவியேற்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆயுதமேந்திய குழுக்கள் தலைநகர் வாஷிங்டன் டிசி உட்பட 50 மாநிலங்களிலும் ஒன்று கூடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பதவியேற்பு விழா மிக எளிமையாக இராணுவ அணிவகுப்புடன் மட்டும் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. டிரம்ப் ஆதரவு வலதுசாரி அமைப்புக்கள் தமது போராட்டத்தை 17 ஆம் திகதி தொடங்கி 20 ஆம் திகதி வாஷிங்டன் டிசியை நோக்கி செல்ல ஆதரவாளர்களைத் திரட்டும் அழைப்பை இணையத் தளங்களில் விடுத்துள்ளனர்.
ஜனவரி 6 ஆம் திகதி வன்முறையில் 5 பேர் பலியான கேப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே வந்து பதவியேற்பதில் தனக்கு எந்த பயமும் இல்லை என ஜோ பைடென் அதிரடியாக அறிவித்துள்ளார். எனினும் முன்னர் நடந்த வன்முறை போன்று இன்னொன்று நடைபெறாது இருக்க பதவியேற்பு விழாவின் பாதுகாப்பை உறுதிப் படுத்த சுமார் 15 000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை இறக்கவும் அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்