உலகின் கவனம் பெறும் 100 நபர்களில் ஒருவராக, 2021 ம் ஆண்டின் TIME பட்டியலில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார் 20 வயதுடைய தமிழ் கனடியரான மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் மிசிசாகா நகரில் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெற்றோருக்குப் பிறந்த மைத்ரேயி, தான் ஒரு தமிழ்க் கனடியர் என்றே தன்னை அடையாளப்படுத்த விரும்புவதாகச் செவ்விகளில் தெரிவித்துள்ளார்.
2020 நெற்ஃபிளிக்ஸ் தொடரான நெவர் ஹேவ் ஐ எவர் ( Never Have I Ever) என்ற தொடரில் தேவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் கவனம் பெற்றவர். இத்தொடரில் நடிப்பதற்கு விண்ணப்பித்த 15,000 வேட்பாளர்களிலிருந்து, இத் தொடரின் இயக்குனர் மிண்டி காலிங்கால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மைத்ரேயி, 2019 ஆம் ஆண்டில், டுடே என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தடைகளை உடைத்து உலகை மாற்றியமைக்கும் 18 சிறுமிகளின் பட்டியலிலும் இடம் பிடித்தவர். இந்நிகழ்ச்சியில் இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றிருந்த போதும், வெரைட்டி என்ற இதழ் இவரது நடிப்பை ஒரு "அசாதாரண செயல்திறன்" எனப் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிப்பதை விரும்பும் இவர், இயக்குவதில் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ளார். ஆயினும் அதற்கான காலம் இன்னமும் உள்ளது என்றும் தற்போதைக்கு நடிப்பிலேயே கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வமாக உள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்