கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் மத்தியிலுள்ள அணுசக்தி கூடத்தில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் இது தொடர்பில் இஸ்ரேல் அரசு இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் டிமோனா நகருக்கு அருகில் ஒரு உதைப் பந்தாட்ட மைதானத்தின் அளவுடைய பிரதேசத்தில் பல அடிகள் ஆழத்தில் சிமோன் பெரெஸ் நெகெவ் அணுசக்தி ஆய்வு மைய ரியாக்டரில் இந்த புதிய இரகசிய ஆய்வு முன்னெடுக்கப் படுகின்றது. இந்த ஆய்வு மையம் கடந்த சில தசாப்தங்களாக இஸ்ரேலின் அணுசக்தி இலக்குகளை அடையும் புளூட்டோனிய அகழ்வுக்குப் பயன் படுத்தப் பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் புதிய இரகசிய செயற்திட்டம் குறித்து இஸ்ரேல் எந்தவித கருத்தும் இதுவரை எந்தவொரு ஊடகத்துக்கும் தெரிவிக்கவில்லை. உலகின் அணுவாயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்தில் இதுவரை இணையாத இஸ்ரேல் தனது அணுசக்தித் திட்டங்கள் குறித்து கட்டாயம் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் சர்வதேசத்துடனும், அமெரிக்காவுடனும் 2015 ஆமாண்டு தான் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சியில் ஈரான் வெளியேறி இருந்தது. இதையடுத்து இஸ்ரேல் தன்னைப் பலப் படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றது. ஈரானில் தற்போது அதிபர் ஹசன் றௌஹானியின் ஆட்சி முடியடையவுள்ள நிலையில் அங்கு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த அதிபர் தேர்தலில் ஈரான் அணுசக்தி விவகாரம் முக்கிய செல்வாக்கு செலுத்தும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்