இத்தாலியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மே மாதத்தில் தளர்த்துவது குறித்து இத்தாலியின் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சுற்றுலா வணிகங்களை மீண்டும் திறக்க முடியும் என்று அமைச்சர்கள் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜூன் 2ந் திகதி, இத்தாலியில் ஒரு தேசிய விடுமுறை நாள். அதுவே மீண்டும் திறப்பதற்குப் பொருத்தமான நாளாக இருக்கும் என, இத்தாலியின் சுற்றுலா மந்திரி மாசிமோ கரவாக்லியா இத்தாலிய தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மீண்டும் திறப்பது குறித்து மிகவும் கருத்தியல் விவாதம் உள்ளது. ஆனால் தொடர்ந்து எதிர்மறை சமிக்ஞைகளை மட்டும் கொடுப்பது தவறு, ஏனென்றால் பொருளாதாரமும் எதிர்பார்ப்புகளில் இயங்குகிறது. இத்தாலியின் கொரோனா வைரஸ் பூட்டுதல் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதில் சுற்றுலாத்துறை முக்கியமானது” என்றார்.
"கடந்த ஆண்டு நாங்கள் எதை எதிர்த்து நிற்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாத நிலையில் வைரஸுடன் போராடினோம். இப்போது எங்களுக்கு கடந்த கால அனுபவமும் தடுப்பூசி திட்டமும் உள்ளது." என்று கூறிய அவர்,
இந்த ஆண்டு ஐரோப்பிய அல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலாவை அனுமதிக்கலாமா என்று குறிப்பிடவில்லை. அத்துடன் ஐரோப்பிய “பயண பாஸ்போர்ட்” திட்டத்தில் இத்தாலி சேர திட்டமிட்டுள்ளதா இல்லையா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில் பிராந்திய விவகார அமைச்சர் மரியாஸ்டெல்லா கெல்மினி வியாழக்கிழமை தொழில்துறை மாநாட்டில் இத்தாலியின் கட்டுப்பாடுகளில் முக்கியமானவை, மே மாதத்தில் தளர்த்தப்படும் என்றும், ஏப்ரல் 20 ம் திகதி முதல் சில கட்டுப்பாடுகள் கைவிடப்படலாம் என்றும் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் பல இத்தாலிய நகரங்களில் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியதை அடுத்து அமைச்சர்களின் அறிக்கைகள் வந்துள்ளன. செவ்வாயன்று ரோம் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் வன்முறையில் இறங்கியது.
இப்போதைக்கு, இத்தாலியின் தடுப்பூசி விகிதம் எதிர்பார்த்ததை விட மெதுவாகவே உள்ளது. அதே நேரத்தில் அண்டை ஐரோப்பிய நாடுகளை விட அதிக இறப்பு எண்ணிக்கையை அந்த நாடு தொடர்ந்து தெரிவிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்