உலகம்
Typography

பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜோன் கிலென் என்பவர் தனது 95 ஆவது வயதில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் காலமாகி உள்ளார்.

இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவராகவும் பெயர் பெற்றவர் ஆவார். அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினராக மிக நீண்ட காலம் பணியாற்றிய இவர் உலகின் மிக வயதான விண்வெளி வீரராகவும் திகழ்ந்து வந்தார். கொலொம்புஸில் அமைந்திருந்த ஓஹியோ மாநிலப் பல்கலைக் கழகத்தின் ஜேம்ஸ் கேன்சர் வைத்தியசாலையில் இவர் காலமானதை கிலெனின் நிதியுதவியில் அவர் பெயரில் இயங்கி வரும் ஜோன் கிலென் கல்லூரிப் பேச்சாளர் ஹாங்க் வில்சன் உறுதிப் படுத்தியுள்ளார்.

1962 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி Friendship 7 என்ற விண் ஓடத்தில் (space capsule) இவர் பூமியைச் சுற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஜோன் கிலெனுக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த பொது மக்கள் விருதான சுதந்திரத்துக்கான அதிபரின் மெடலை அளித்து கௌரவப் படுத்தியிருந்தார். இந்நிலையில் இவரின் இழப்பை அடுத்து அமெரிக்கா தனது மிக முக்கியமான ஐகோன் ஒருவரை இழந்து தவிப்பதாக ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கிலெனின் மறைவு பேரிழப்பு என்றும் வருங்கால ஆய்வாளர்களுக்காக பல தலைமுறைகளுக்கும் இவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழக் கூடியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS