உலகம்
Typography

சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியில் இருந்து இறுதி மக்கள் மற்றும் கிளர்ச்சிப் படை அடங்கிய குழு இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் பூரணமாக வெளியேற்றப் படவுள்ளனர்.

 

இத்தகவலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமான ICRC உம் உள்ளுர் ஊடகங்களும் உறுதிப் படுத்தியுள்ளன. கடந்த வாரம் எதிரணியான கிளர்ச்சிப் படை சரணடைவதாகக் கூறியதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் பட்ட மீட்புப் பணியில் இதுவரை 30 000 இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் இன்று வெளியேற்றப் படும் இறுதிக் குழுவில் சுமார் 3000 பேர் உள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

 

4 வருடத்துக்கும் மேலாக நீடித்த போரில் சிரியாவின் மிகப்பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு மிகப் பெரிய வெற்றியாகும். இதேவேளை கிழக்கு அலெப்போவில் சிரிய கிளர்ச்சியாளர் பகுதியில் இருந்து போர் சூழலைத் தனது டுவிட்டர் கணக்கு மூலம் புகைப்படங்கள், தரவுகள் மற்றும் வீடியோக்கள் வாயிலாகப் பகிர்ந்த சிரிய சிறுமியான பானா அலபெத் என்பவர் ஊடகக் கவனம் பெற்று துருக்கி அதிபர் எர்டோகன் ஐ சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

 

அச்சிறுமியை கட்டி அணைத்த படி அதிபர் எர்டோகனுடன் ஓர் புகைப்படம் மற்றும் பானா அலபெத் இன் குடும்பத்தினர் அதிபருடன் காணப்படும் ஓர் புகைப்படம் என்பனவும் பானாவின் டுவிட்டர் தளத்தில் வெளியாகி அனைவரினதும் பாராட்டை பெற்றுள்ளார் அவர்.

 

கடந்த செப்டம்பர் முதல் @AlabedBana என்ற அவரது டுவிட்டர் பக்கம் இயங்கி வருகின்றது. இன்றைய நிலையில் சுமார் 330 000 பேர் அவரைப் பின் தொடர்கின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்