உலகம்
Typography

இன்று வியாழக்கிழமை போப் பிரான்ஸிஸ் போலந்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கு பற்றி உரையாற்றிய பின்னர் திரும்புகையில் கால் தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். ஆனாலும் அருகில் இருந்த பாதிரியார்கள் துணையுடன் உடனே எழும்பி  நின்ற அவர் காயம் ஏதும் இன்றித் தப்பித்துள்ளார். தமது கண்முன்னே பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

79 வயதாகும் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பாப்பரசர் பிரான்சிஸ் தெற்கு போலந்தின் செஷ்டோகோவா இலுள்ள ஜாஸ்னா கோரா என்ற மடாலயத்தில்  நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து (Mass) சிறப்புரை ஆற்றிய பின் திரும்பிய போதே கால் தடுக்கி வீழ்ந்துள்ளார் என வத்திக்கான் பேச்சாளர் கிரெக் புர்கே தெரிவித்துள்ளார். செஷ்டோகோவா என்ற இடம் பிளாக் மடொன்னா என்ற கிறித்தவ நம்பிக்கையைச் சேர்ந்த ஆச்சரியப் படத் தக்க திறன்களை வெளிப்படுத்திய ஓர் ஐகோனின் இல்லம் ஆகும்.

ஐரோப்பாவில் அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பாப்பரசரின் இந்த போலந்து விஜயமும் மிக அதிகளவு போலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடனே தான் அமைந்துள்ளது. இந்நிலையில் பாப்பரசரோ மேல் பகுதி மட்டும் திறந்த ஆனால் சுற்றி வர மூடிய குண்டு துளைக்க முடியாத கவச வாகனத்தில் பொதுமக்கள் மத்தியில் பயணம் மேற்கொண்டுள்ளார். பாப்பரசைத் தரிசிக்கும் ஆர்வத்தில் மடாலயத்துக்கு வெளியே கூடாரம் அமைத்து இரவு முழுதும் தூங்காது விழித்திருந்து போலந்து மக்கள் சிறியவர் இளையவர் என்ற வித்தியாசம் இன்றித் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS