உலகம்
Typography

அண்மையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் சரணடையும் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதாக வாக்களித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிரியாவில் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட வடக்கு அலெப்போ நகரில் மாட்டிக் கொண்டுள்ள பொது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப் பெரியளவில் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் உதவித் திட்டத்தை அளிக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

சிரிய யுத்தத்தில் ஏற்கனவே அதிபர் அசாத் சார்பான அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சிரிய யுத்தத்தால் பிளவு பட்ட நகரமான அலெப்போவில் தற்போதைய சூழலில் 200 000 பொதுமக்கள் மாட்டிக் கொண்டுள்ளதாக அஞ்சப் படுகின்றது. அலெப்போவுக்கு செல்லும் பிரதான சப்ளை பாதையை கிளர்ச்சிப் படை இந்த மாதத் தொடக்கத்தில் மூடியதைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு உணவுக் குறைபாடும் வரம்பு மீறிய விலை வாசியும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிரிய பாதுகாப்பு அமைச்சர் சேர்கெய் ஷொயிகு ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை 3 மனிதாபிமான வழிகள் திறக்கப் பட்டிருப்பதாகக் கூறினார். இதில் முதலாவதாக தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ள பொது மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குதல் மற்றும் 2 ஆவதாக தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பும் கிளர்ச்சியாளர்களுக்கும் உதவி அளித்தல் மற்றும் 3 ஆவதாக கிளர்ச்சியாளர்கள் அலெப்போவை விட்டு ஆயுதங்களுடன் யுத்தமின்றி வெளியேற வழி வகுத்தல் என்பன அடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிரிய யுத்தம் 280 000 மக்களுக்கும் அதிகமானவர்களைப் பலி வாங்கி உள்ளதுடன் பல இலட்சக் கணக்கான மக்களை அகதிகளாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அலெப்போ நகரைத் தற்போது சுற்றி வளைத்துள்ள சிரிய அரசு அதனைக் கட்டுப் படுத்தி வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் சரணடைய 3 மாதகால அவகாசம் அளித்துள்ளதுடன் இதற்குள் சரணடைபவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்