உலகம்
Typography

இரு நாடுகளுக்கு இடையிலும் அரசியல் இராஜதந்திர முறுகல் நிலை காணப் படும் பட்சத்திலும் இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு ஈரான் யாத்திரீகர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என வெள்ளிக்கிழமை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சுமார் 60 000 ஈரான் யாத்திரீகர்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்காவுக்கு செல்ல கடந்த வருடம் சவுதி அரேபியாவால் அனுமதி மறுக்கப் பட்டிருந்தார்கள். இதற்கு முக்கிய காரணமாக ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே பாதுகாப்புத் துறை மற்றும் விநியோகத்துறை ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட கடும் விரிசல் அமைந்திருந்தது.

மேலும் சிரியா, ஈராக், யேமென், பஹ்ரெயின் ஆகிய நாடுகளில் ஆயுதம் தாங்கிய ஷைட்டி முஸ்லிம் குழுக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகத் தொடர்ச்சியாக அதன் மீது சவுதி அரேபியா குற்றம் சாட்டி வந்தது. ஆயினும் சமீபத்தில் இவ்விரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இவ்வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ஹஜ் யாத்திரையில் ஈரானியர்களும் இணையவுள்ளனர். இதனை சவுதியின் ஹஜ் அமைச்சும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ பத்திரிகை ஏஜன்ஸியும் உறுதிப் படுத்தியுள்ளன.

இதேவேளை ISIS மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத குழுக்களுக்கு சவுதி மறைமுகமாக அளித்து வரும் ஆதரவையும் நிறுத்த வேண்டும் என ஈரான் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 464 ஈரானியர்கள் பலியாகி இருந்ததாகவும் ஈரான் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் ஹஜ் யாத்திரையில் உலகம் முழுவதிலும் இருந்து 1.8 மில்லியன் யாத்திரீகர்களுக்கும் அதிகமானோர் பங்கு பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்