உலகம்
Typography

வடகொரியா இறுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை ஜப்பானில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள  சின்போ தளத்தில் இருந்து மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் முன்பு கருதப் பட்டது போல் இது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணை அல்ல என்றும் இதனால்  அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நிலவவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வடகொரிய இராணுவ வலையமைப்பின் தலைவர் ஷின் இன் க்யூன் என்பவர் ஊடகங்களுக்கு அளித்த தகவலில் குறித்த ஏவுகணை அமெரிக்காவின் க்வாம் முதல் அலாஸ்கா வரைப் பாயக் கூடியது  என்பதுடன் அது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும் ஏவப்படக் கூடியது என்று தெரிவித்துள்ளார். சனிக்கிழமை வடகொரியாவில் அந்நாட்டின் தேசத் தந்தையாகக் கொண்டாடப் படும் இரண்டாம் கிம் சங்கின் பிறந்த நாளை முன்னிட்டு இராணுவப் பேரணி நடைபெற்ற நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ஆசிய நாடுகளுக்கான 10 நாட்கள் பயணமாக தற்போது தென்கொரியாவை வந்தடைந்துள்ளார்.

சமீப காலமாக வடகொரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் கொரியத் தீபகற்பத்துக்கு அமெரிக்காவின் சக்தி வாய்ந்த விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் சில நீர்மூழ்கிகள் உட்பட போர்க் கப்பல்கள் சிலவும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இக்கப்பல்களில் 5000 கடற்படை வீரர்களும் உள்ளனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தான் மைக் பென்ஸின் தென்கொரிய விஜயம் அமைந்துள்ளது.

அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் தென் கொரியா அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் பலம் வாய்ந்தது என்றும் இதனைச் சாதாரணமாக வடகொரியா எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறியதுடன் அனைத்து விவகாரங்களுக்கும் அமைதியான முறையிலான தீர்வையே முதலில் அமெரிக்கா விரும்புகின்றது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள மிகச் சக்தி வாய்ந்த வல்லரசான சீனா நேபாலுடனான தனது முதலாவது இராணுவக் கூட்டுப் பயிற்சியை காத்மண்டு நகரில்  ஆரம்பித்துள்ளது. இதில் கலந்து கொள்ள சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஏற்கனவே காத்மண்டுவை வந்தடைந்துள்ளது. மேலும் இப்பயிற்சிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயரான சகர்மாதா அடங்கும் விதமாக சகர்மாதா நட்பு-2017 எனப் பெயரிடப் பட்டுள்ளது. இக்கூட்டு இராணுவப் பயிற்சி எதிர்வரும் ஏப்பிரல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 10 நாட்கள் நீடிக்கும் இப்பயிற்சி தீவிரவாத எதிர்ப்புக்கும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்குமாக என நடைபெறுகின்றது.

Most Read