உலகம்
Typography

அண்டங்களை (Galaxies) இணைக்கும் பாலமாக (filaments or webs) செயற்படும் கரும்பொருளின் (Dark Matter) இனது முதலாவது உருவகப் படத்தை (Map) கணணி வாயிலாக வானியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதற்கு செய்மதிகள் மூலம் பூமியில் இருந்து 40 மில்லியன் ஒளியாண்டுக்குக் குறைவான தொலைவில் இருக்கும் அண்டங்களை இணைக்கும் கரும் பொருள் வலைமையமைப்புக்கள் பயன்படுத்தப்  பட்டுள்ளன.

அதாவது இதுபோன்று அவதானிக்கப் பட்ட 23 000  இற்கும் அதிகமான அண்ட ஜோடிகளின் (Galaxy pairs) பால அவதானங்கள் இணைக்கப் பட்டு கரும்பொருள் வெளிப்பாடு பற்றிய உருவகப் படம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதுவரை காலமும் பிரபஞ்சத்தில் கரும்பொருளால் உருவாக்கப் படும் அண்ட இணைப்புப் பாலங்கள் குறித்து கருத்தளவிலேயே (theorotically) அறியப் பட்ட போதும் இந்த பிரபஞ்ச வலையமைப்பு (Cosmic web) இன்று வரை அவதானிக்கப் படாத அல்லது சித்தரிக்கப் படாத ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் இது தற்போது சாத்தியமாகி உள்ளது.  கரும்பொருள் வலையமைப்புப் பற்றி வானியலாளர்களால் கணணி மூலம் வரையப் பட்ட இந்தப் படத்தில் சிவப்பு நிறத்தில் இருப்பது கரும்பொருளின் வெளிப்பாடு எனவும் மிகப் பிரகாசமான அண்டங்களின் வெளிப்பாடு வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் விளக்கப் படுகின்றது.

எமது பிரபஞ்சத்தின் திணிவில் 27% வீதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள சடப்பொருளான கரும் பொருள்
(அல்லது கருமைப் பிண்டம் - Dark Matter) கண்ணுக்குத் தெரியும் ஒளியை உறிஞ்சுவதோ பிரதிபலிப்பதோ கிடையாது. இதனால் அது கண்ணுக்கு  அல்லது தொலைகாட்டிகளுக்குத் தெரிவதில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியும் ஏனைய சடப்பொருள்களுடன் (Visible matter) அதன் தொடர்பு அல்லது ஈர்ப்பு காரணமாக அதன் பிரசன்னத்தை ஊகிக்க முடியும். இதற்கு ஒரு சிறிய உதாரணம் கூறலாம். அதாவது முற்றாக மூடப் பட்ட இருள் சூழ்ந்த அறை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் ஒரு டோர்ச் லைட்டை ஆன் செய்யுங்கள். அதன் பின் நீங்கள் பார்க்கக் கூடியது டோர்ச் வெளிப்படுத்தும் லைட் ஒன்றைத் தான்.  அதற்காக டோர்ச்சைச் சுற்றியுள்ள அறை என்பது உண்மையில் இல்லை  என்று ஆகாது. இது போன்றது தான் கரும் பொருளின் இருப்பும். இந்த இருப்பை மிக உறுதியாகவே ஏற்றுக் கொள்ளும் விஞ்ஞானிகள் கரும்பொருள் பிரபஞ்சத்தின் வெளிப்பாட்டுக்கும் மிக அவசியமானது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அது எப்படிப் பட்டது? எங்கெல்லாம் அமைந்திருக்கின்றது? போன்ற விபரங்கள்  விஞ்ஞானிகளுக்கு இதுவரை தெரியாத ஒன்றாகும்.

அண்டங்களை இணைத்து வைத்திருக்கும் முக்கிய காரணியாகக் கரும் பொருள் விளங்குகின்றது. ஆனால் எமது கண்ணுக்குத் தெரியும் அணுக்கள் மற்றும் துணை அணுத் துணிக்கைகள் போன்றன இப்பிரபஞ்சத்தின் திணிவில் மொத்தம் 5% வீதத்தை மாத்திரமே கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்