உலகம்
Typography

 

வடகொரியாவுடன் போர்ப் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் ஜப்பானில் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தைக் கதவுகள் திறக்கப் படும் என்றும் ஜப்பானின் உட்கட்டமைப்பு விவகாரங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிகரிக்கும் என்றும் வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் பென்ஸ் முக்கியமாக ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே மற்றும் துணைப் பிரதமர் டாரோ அசோ ஆகியோருடன் கலந்து பேசியுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவின் வணிகச் செயலாளர் வில்பர் றொஸ் ஜப்பானின் வர்த்தக அமைச்சர் ஹிரோஷிகே ஷெகோ இனைச் சந்தித்து டோக்கியோவுடனான வாஷிங்டனின் இருவழி வர்த்தக உறவைக் கைச்சாத்திட்டு இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தென்கொரியாவுக்கான தனது பயணத்தை முடித்து விட்டு ஜப்பானை வந்தடைந்த பென்ஸ் ஜப்பானின் பிராந்தியப் பாதுகாப்புக்கும் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதி மொழி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் ஆசிய வலயத்தில் 12 நாடுகளின் கூட்டமைப்புடன் நிலவி வந்த TPP எனப்படும் Trans pacific partnership வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தார். எனினும் தற்போது துணை அதிபர் மைக் பென்ஸின் 10 நாட்கள் கால அளவு கொண்ட ஆசிய நாடுகளுக்கான விஜயம் ஆசிய வலயத்தில் அதிபர் டிரம்பின் கொள்கைப் படியான வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்காக என அமைந்துள்ளது.

தனது தேர்தல் பிரச்சார சமயம் தொடக்கம் தற்போது பதவியில் நீடிக்கும் வேளையிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கே முன்னுரிமை (America first) என்ற வர்த்தகக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்