உலகம்
Typography

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட சில அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுதும் கிட்டத்தட்ட 99 நாடுகளில் கடந்த வாரம் தொடுக்கப் பட்ட சைபர் தாக்குதலில் பல கணணிகள் முடங்கியதுடன் 300 டாலர் பெறுமதியான பிட்காயின்கள் செலுத்தப் படுமாறு கணணிப் பாவனையாளர்களுக்குக் கட்டாயச் செய்தியும் தோற்றமளித்தது.

தற்போது பாதிக்கப் பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 150 ஆகவும் கணணிகளின் எண்ணிக்கை 3 இலட்சமாகவும் உயர்ந்துள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து முன்னமே ஊகித்து வைத்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பாவனையாளர்களைப் பாதுகாக்க பேட்ச் என்ற மென்பொருளை வெளியிட்டது. மேலும் இத்தாக்குதலுக்கு உள்ளான 150 நாடுகளிலும் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் பின்ற நாடுகளும் அடங்குவதுடன் பிரசித்தமான இணையத் தள பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் இன் தகவல் படி பிணைத் தொகை கேட்கும் ரான்சம்வேர் தாக்குதல் குறித்து இதுவரை உலகம் முழுதும் இருந்து 75 000 புகார்கள் கிடைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ரான்சம்வேர் தாக்குதலுக்கு அதிகளவு பாதிப்பைச் சந்தித்துள்ள நாடு ரஷ்யா ஆகும். இதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை ரஷ்ய உட்துறை அமைச்சகத்திலுள்ள கணணிகளைப் பாதுகாப்பதற்காக பாரம்பரிய ரஷ்ய கிறித்தவ சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் வரவழைக்கப் பட்டு குறிப்பிட்ட கணணிகளுக்குப் புனித நீர் தெளித்து வழிபாடுகள் நடத்தப் பட்டுள்ளன.

மின்னஞ்சல் மூலம் திறக்கப்படும் ரேன்சம்வேர் வைரஸ் கணணியின் அனைத்துத் தகவல்களையும் ஆக்கிரமிப்பு செய்வதுடன் நின்று விடாது 300 டாலர் முதல் 600 டாலர் வரை டிஜிட்டல் முறையிலான பிட்காயின் வழங்க வேண்டும் என்றும் பணம் கொடுத்தால் மட்டுமே தகவல்கள் மீள விடுவிக்கப் படும் எனவும் நிபந்தனை விதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்க பல நாடுகள் திறமையான மென்பொருள் நிபுணர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரான்சம்வேர் மூலம் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு வானாகிரை ரான்சம்வேர் மூலம் ஏடிஎம் இயந்திரங்கள் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதை அறிந்து கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏரளமான ஏடிஎம் மையங்களைத் தற்காலிகமாக முடக்கி தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இத்தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டதாகக் கூறிய போதும் ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரச நிறுவனங்களின் கணணிகள் இதன் மூலம் பாதிக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது.

Most Read