உலகம்
Typography

மத்திய இலண்டனிலுள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம நபர் ஒருவர் வியாழக்கிழமை நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப் பட்டதுடன் மேலும்  6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த நபர் கண்மூடித் தனமாக தாக்குதலை நடத்தத் தொடங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்காட்லாந்து யார்டு போலிஸ் பிரிவு அவரைக் கைது செய்துள்ளது. 

பின்னர் போலிஸ் விடுத்த அறிக்கையில் இத்தாக்குதலில் ஈடுபட்டவர் மனநலம் சரியில்லாதவர் என்றும் இதற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனினும் இத்தாக்குதலைத்  தொடர்ந்து இலண்டன் நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கைதான நபர் சோமாலிய பின்புலத்தைக் கொண்ட நோர்வே நாட்டவர் என்றும் அடையாளம் காணப் பட்டுள்ளார்.

 இதேவேளை ஆப்கானிஸ்தானில் இராணுவப் பேரணி ஒன்றின் மீது தலிபான்கள் தொடுத்த தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் கொல்லப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. வியாழக்கிழமை மேற்கு ஹேரத் மாகாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். கொல்லப் பட்ட சுற்றுலாப் பயணிகளில் 8 பிரித்தானியர்கள், 3 அமெரிக்கர்கள் மற்றும் 1 ஜேர்மன் நாட்டவர் அடங்குகின்றனர். மறுபுறம் பாகிஸ்தானின் அரச ஹெலிகாப்டர்  ஒன்று பழுதடைந்து கிழக்கு ஆப்கானிஸ்தானில் தரை இறங்கியதாகவும் இதில் பயணித்த 6 பேரும் தலிபான்களால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப் பட்டு விட்டனர் என்றும் கூடத் தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS