உலகம்
Typography

2016 ஜூலை 15 ஆம் திகதி துருக்கியில் இராணுவத்தின் ஒரு பகுதியால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப் பட்டது. இந்த முறியடிப்பில் 260 பொது மக்கள் உயிர் இழந்தும் 2196 பேர் படுகாயம் அடைந்தும் இருந்தனர். இச்சம்பவம் நிறைந்து ஓர் ஆண்டு நிறைவை துருக்கி இன்று சனிக்கிழமை அனுசரிக்கின்றது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இருந்து இன்று வரை துருக்கி அரசு சுமார் 150 000 இற்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் சுமார் 50 000 இற்கும் அதிகமான கைது நடவடிக்கைகளால் எதிர்க் கட்சியின் கடும் எதிர்ப்பையும் துருக்கி சம்பாதித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி முறியடிக்கப் பட்டது துருக்கியில் சுதந்திரத்துக்கான 2 ஆவது யுத்தத்துக்கு சமம் என அந்நாட்டுப் பிரதமர் பினாலி யில்டிரிம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அதாவது ஜூலை 15 துருக்கியில் வருடாந்த விடுமுறை தினமாக அறிவிக்கப் பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை பாரிய அமைதிப் பேரணிகள் அங்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன. மேலும் இஸ்தான்புல்லில் நடக்கும் பேரணி ஒன்றில் துருக்கி அதிபர் எர்டோகன் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு மிக நூதனமான முறையில் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு ஆதரவான இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் உதவியால் தான் முறியடிக்கப் பட்டது என்பதும் முக்கியமானது. மேலும் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள முஸ்லிம் மதகுருவான ஃபெத்துல்லா குலென் என்பவர் தலைமையில் இந்த சதி முயற்சி முன்னெடுக்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டிருந்த போதும் அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தார்.

இதேவேளை துருக்கியில் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மேலதிகமாக 7395 பேர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் இன்று சனிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்