உலகம்
Typography

 

அண்மைக் காலமாக வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அணுவாயுத இலக்குகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் யுத்தப் பதற்ற நிலை அதிகரித்து வந்துள்ள நிலையில் தற்போது வடகொரியாவிடம் முன்பு அறியப் பட்டதை விட மிக அதிக புளூட்டோனியம் இருப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

அணுவாயுத தயாரிப்புக்கு மிக அவசியமான மூலப்பொருளான புளூட்டோனியம் வடகொரியாவின் பிரதான அணு உற்பத்தி நிலையத்தில் அதிகமாக இருப்பதை புதிய செய்மதிப் படங்கள் பிரதிபலிப்பதாக அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் யொங்பியொன் அணுசக்தி கட்டடத் தொகுதியில் கடந்த செப்டம்பர் முதல் இவ்வருடம் ஜூன் வரை புளூட்டோனியத்தின் அளவு இரு மடங்காகி இருப்பதாக thermal imagery எனப்படும் வெப்ப அடையாள செய்மதி புகைப் படங்களால் தெரிய வந்துள்ளதாக ஜோஹ்ன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

2013 இல் தனது 3 ஆவது அணுவாயுதப் பரிசோதனையின் பின்னர் யொங்பியொன் ரியாக்டரை மீளவும் ஆரம்பித்திருந்தது வடகொரியா. 2006 முதற்கொண்டு வடகொரியா இதுவரை 5 முறை அணுப்பரிசோதனைகளை நிலத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தனது முதல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையையும் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. தற்போது அமெரிக்காவின் நிலம் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை வடகொரியா கொண்டிருப்பதாக கணிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா தனது அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வர ஐ.நா பாதுகாப்புச் சபை மூலம் அதன் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் தீவிரப் படுத்தவும் அதன் நட்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா என்பவை கூட வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை தீவிரப் படுத்தவென அழுத்தம் தெரிவித்தும் அமெரிக்கா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்