உலகம்
Typography

இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஈரான் பாராளுமன்றத்துக்குத் தனது புதிய கேபினேட்டை முன் வைத்தார் அந்நாட்டு  அதிபர் ஹஸன் றௌஹானி. உலக சக்திகளுடன் டெஹ்ரானின் அணுசக்தி தேவைக்கு ஏற்ற விதத்தில் பிரதான அணுசக்தி வடிவமைப்பாளருக்கு முதன்மை ஸ்தானம் அளிக்கப் பட்டுள்ளது.

றௌஹானி தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனும் ஏனைய 5 வல்லரசுகளுடனும் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதன் மூலம் ஈரானுக்கு எதிராக ஐ.நா ஆல் விதிக்கப் பட்டிருந்த பல பொருளாதாரத் தடைகளைத் தளர்வுறச் செய்தார். இந்நிலையில் ஈரான் உள்நாட்டு ஊடகங்களில் வெளியான இன்றைய கேபினேட் பட்டியலில் வெளியுறவுத் துறை அமைசர் மொஹம்மட் ஜாவட் ஷரிஃப் இனை அணுசக்தி உடன்பாட்டுக்கான முதன்மை இடைத்தரகராகவும், தடை நீக்கப் பட்ட பின் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த எண்ணெய் வள அமைச்சர் பிஜான் ஷங்கனேஹ் இனை அதே துறையிலும் மீளவும் றௌஹானி நியமித்துள்ளார்.

இதேவேளை தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி இருந்ததன் பிரகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஈரானுடனான புதிய அணுசக்தி கொள்கையை ஏற்றல் என்பது நிச்சயம் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமம் என றௌஹானி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானின் ஏவுகணை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் காரணமாக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்ட மூலத்தில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். இந்த புதிய தடை உத்தரவுகளை முன்னர் கைச்சாத்திட்ட அணுசக்தி உடன்பாட்டுக் கொள்கையை மீறிய செயல் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ள ஈரான் இதற்கு சமனான பதிலடி கொடுக்கவும் நாம் தயார் என்று தெரிவித்திருந்தது.

இதேவேளை ஈரானின் சுப்ரீம் தலைவரான (ஆன்மிகத் தலைவர்) அயதொல்லா அலி கமெனெயி இனது சம்மதத்தின் அடிப்படையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு அமைப்பு போன்றவற்றுக்கு அதிபர் றௌஹானி புதிதாக நபர்களை நியமித்து இருப்பதால் ஈரானிய சட்ட வல்லுனர்கள் இதனை எதிர்க்க மாட்டார்கள் எனவும் தெரிய வருகின்றது.

ஈரானில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட அதிபரின் அதிகாரம் ஆன்மிகத் தலைவரால் மட்டுப் படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆயுதம் தாங்கிய படையின் மூத்த கமாண்டராக செயற்படும் சுப்ரீம் தலைவர் நீதித்துறைத் தலைமையை மாற்றும் அதிகாரத்தையும் எந்தவொரு முக்கிய கொள்கை வகுப்பையும் அனுமதிக்கும் அதிகாரத்தையும் கொண்டவர் ஆவார். ஈரானின் முன்னால் அதிபர் அஹ்மதிநிஜாட் இனது ஆட்சிக் காலத்தில் அவரது கேபினட்டில் ஒரு பெண் அமைச்சர் இருந்த போதும் றௌஹானி தற்போது அறிவித்துள்ள கேபினட்டில் எந்த ஒரு பெண் அமைச்சரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read