இஸ்லாமியர்கள் எதிர்க்கும் திரைப்பட விவகாரம் : ஐ.நாவில் உரையாற்றவுள்ள ஒபாமா
- Tuesday, 25 September 2012 09:51

அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முடிவெடுத்துள்ளார்.
இன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள ஒபாமா இதன் போது, அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்யவிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் டாமி வியெடெர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கூறப்படும் குறித்த திரைப்பட வீடியோவின் நோக்கங்களை நாம் நிராகரிக்கிறோம். எனினும், அதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விவகாரத்தில் ஒரு போதும் அமெரிக்கா பின்வாங்காது. அமெரிக்காவை அவமதித்தவர்களுக்குரிய தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம். நாங்கள் எமது உறுதியான ஜனநாயக சக்தியை வெளியுலகுக்கு தொடர்ந்து காண்பிப்போம் என கூறியுள்ள அவர் லிபியா, எகிப்து, யேமன் போன்ற நாடுகளில் அமெரிக்காவுகு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர், இன்றைய உரையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஈரானின் அச்சுறுத்தல் தொடர்பிலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது உரையில் உரையாற்றவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
