உலகம்
Typography

100 வருடங்களில் மிக வலிமையான 8.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் மெக்ஸிக்கோவின் தெற்கே பசுபிக் கடற்கரைப் பகுதியை வியாழன் பின்னிரவு தாக்கியதில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்ஸிக்கோ, கௌதமாலா, பனாமா, எல்சல்வடார், கோஸ்டோரிக்கா, நிக்காரகுவா, ஹோண்டுரஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்து மீளப்பெற்றுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட பின் குறித்த நாடுகளில் பேரிடர் மேலாண்மைக் குழு ஆயத்த நிலையில் இடப்பட்டது. மெக்ஸிக்கோவில் வாழும் 50 மில்லியன் மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்ததுடன் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் பொது மக்கள் அச்சத்துடன் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளில் அடைக்கலம் தேடினர்.

மெக்ஸிக்கோ சிட்டி உட்பட பல இடங்களில் நில அதிர்வு வலிமையாக சில நிமிடங்கள் உணரப்பட்டதுடன் நகர உட்கட்டமைப்புகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது. மெக்ஸிக்கோவின் 10 மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனர்த்த கால விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. பூமியில் நிலத்துக்கடியில் பல நிலக்கீழ் தகடுகள் சந்திக்கும் பகுதியில் மெக்ஸிக்கோ அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் அதிகம் தாக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் அண்மைய நிலநடுக்கம் சுமார் 10 000 பேரைப் பலி வாங்கிய 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட ஒப்பீட்டளவில் வலிமையானது எனப்படுகின்றது.

1985 நிலநடுக்கத்தை அடுத்து எந்த ஒரு வலிமையான நிலநடுக்கங்களுக்கும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இணையாக கட்டடக் கட்டுமானங்களில் மெக்ஸிக்கோவும் தீவிர கொள்கைகளைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read