இறகுகள் & இறக்கைகளுடன் கூடிய டைனோசர் இனத்தின் சுவடு முதன்முறையாக கண்டுபிடிப்பு
- Friday, 26 October 2012 16:01

இறகுகளும், இறக்கையும் உடைய டைனோசர் இனம் வாழ்ந்ததற்குரிய சுவட்டினை முதன்முறையாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கனடாவின் வட துருவத்துக்கு மேற்கு பகுதியில் இச்சுவடுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் விஞ்ஞானப் பெயர் ஓர்னிதோமிமிட்ஸ் (Ornithomimids) என்பதாகும். இந்த டைனோசர் இனம் தொடர்பான விபரங்களை தொல்பொருள் ஆய்வாளரான Darla zelentisky அமெரிக்காவில் பத்திரிகை ஒன்றில் அறியத் தந்துள்ளார்.
இதற்கு முன்னரும் பறவை இன டைனோசர்களின் எலும்புச் சுவடுகள் கண்டு பிடிக்கப் பட்டிருந்த போதும் இறக்கைகள் மட்டுமல்லாது இறகுடன் கூடிய இனத்தின் ஒரே சுவடு இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் ஓர்னிதோமிமிட்ஸ் இனத்தைச் சேர்ந்த அனைத்து பறக்கும் டைனோசர்களுக்கும் இறகுகள் இருந்திருக்கலாம் எனவும் ஊகிக்கப் படுகின்றது. இந்த டைனோசரின் சுவடு 75 மில்லியன் வருடங்கள் பழமையானது எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இதன் இறக்கைகள் பறப்பதற்கு அல்லாது அதன் இனப்பெருக்க காலத்தில் முட்டையை அடை காக்கவும் குளிரைத் தாக்குப் பிடிக்கவும் மட்டுமே உதவியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் இந்த வகை பறவை டைனோசர்களின் எலும்பு மற்றும் சுவடுகள் சீனாவிலும் ஜேர்மனிலும் பாறைகளுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
